×

குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்

நாகர்கோவில்: கடலில் சீற்றம் தொடர்வதால், குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேர் பலியான லெமூர் கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தென் இந்திய பெருங்கடலில் கடந்த 4, 5ம் தேதிகளில் அதிக அலைகள், சீற்றம் காணப்பட்டது. இது தொடர்பாக தேசிய பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் எச்சரிக்கை செய்திருந்தது. இதை அடிப்படையாக கொண்டு குமரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால் கடந்த 5ம் தேதி குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரை பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வெசீஸ் (54) மற்றும் மனோஜ்குமார் (25) ஆகியோர் அலை இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதே போல், குமரி மாவட்டம் விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்த ஆதிஷா (7) என்ற சிறுமியும் கடந்த 5ம்தேதி மாலை தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதி கடலில் நின்று அலையை ரசித்து கொண்டிருந்த போது அலையில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில், திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பயிற்சி டாக்டர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் (6ம்தேதி) நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் பீச்சுக்கு சென்றனர்.

கடலில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவர்களில் 7 பேரை கடல் அலை இழுத்து சென்றது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லெமூர் பீச் நேற்றும் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தடை இருப்பது தெரியாமல் வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். லெமூர் பீச் மட்டுமின்றி மற்ற கடற்கரை சுற்றுலா தலங்களிலும் தடை விதிக்கப்பட்டது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலில் இறங்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம பகுதியில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க கயிறுகள் கட்டி போலீசார் எச்சரித்து இருந்தனர். ஆனால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட படகு போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாடு கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. இதே போல் சங்குதுறை, சொத்தவிளை, முட்டம் உள்பட சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணித்தனர்.

* உயிருடன் மீட்கப்பட்டவர் பலியான சோகம்
கடல் அலையில் சிக்கிக்கொண்ட பயிற்சி டாக்டர்களில் நிஷி, பிரீத்தி பிரியங்கா ஆகிய இருவரில் ஒருவர் 30 நிமிடங்களும், மற்றொருவர் சுமார் 40 நிமிடங்கள் வரை போராடி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இவர்களை அலை வெளியில் தள்ளியதால், சுற்றுலா பயணிகள், மீனவர்கள் இவர்களை மீட்க முடிந்தது.

இதே போல் பலியான காயத்ரியையும் மீட்டு மீனவர் ஒருவர் கரையை நோக்கி வேகமாக கொண்டு வந்தார். ஆனால் கரையை நெருங்கும் சமயத்தில், சுழற்றி அடித்த அலையில் சிக்கி காயத்ரி மூழ்கி இருக்கிறார். இந்த சோகங்களை கூறி பிணவறை முன் விடிய, விடிய மாணவ, மாணவிகள் கதறி அழுதவாறு இருந்தது பரிதாபமாக இருந்தது.

The post குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Echoli Beach ,Lemoore Beach ,Nagercoil ,South Indian Ocean ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை